உள்ளூர் செய்திகள்

சிறந்த வழிகாட்டி இருந்தால் மாணவர்கள் விஞ்ஞானிகளாகலாம்

பொள்ளாச்சி: ‘சிறந்த வழிகாட்டி இருந்தால் மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாறலாம்; பாதைமாறினால் விபரீதமாகிவிடும்’ என்று  ‘சந்திரயான்- 1’ திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறினார். பொள்ளாச்சி அடுத்த வீரல்பட்டியில், ‘லயன்ஸ் கிளப்’ சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான மறுவாழ்வு மைய அடிக்கல்நாட்டு விழா நடந்தது. விழாவில், கிளப்நிர்வாகி ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்ட கவர்னர் அசோக் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ‘சந்திரயான்- 1’ திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை  பேசியதாவது: மனவளர்ச்சியை முழுமையாக பெற்றிருப்பவர்கள் யாரும் இல்லை; அனைவரிடமும் ஏதேனும் ஒரு குறையுள்ளது. மனிதர்களில் ஆண், பெண் என்ற இரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. இருப்பினும், பலரிடமும் ஏதாவதொரு வகையில் வேறுபாடுநிலவுகிறது. மனவளர்ச்சி குறைந்திருப்பதால்தான் ‘உன்னால் செய்ய முடியுமா?’ என்ற கேள்வியே எழுகிறது. அனைவருக்கும் ஒரேமாதிரியாக கை, கால் போன்ற உறுப்புகள் உள்ளன. அனைவரும் பள்ளிகளில் பாடம் படிக்கின்றனர்; வேலைக்கும் செல்கின்றனர். இருப்பினும், ஒருசிலர் மட்டுமே சிறந்த நிலையை எட்டுகின்றனர். அவரவரிடம் உள்ள வசதி, வாய்ப்புக்களை பயன்படுத்தி அனைவராலும் மேலே வர முடிவதில்லை. குறிப்பிட்ட நிலையை அடைய ஏதாவதொரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும். தன்னிடம் உள்ள வசதி, வாய்ப்புகளை மற்றவர்கள் முன்னேற பயன்படுத்த வேண்டும். இங்கிருந்து பார்க்கும்போது வானில் நட்சத்திரங்கள் மட்டுமே அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், அதையும் தாண்டி எண்ணற்ற கோள்கள் உள்ளன. அதில், பூமி என்பது சிறுதுகள்; அதற்குள் இந்தியா, தமிழகம் ஆகியவை சின்னஞ்சிறு துகள்களாக உள்ளன. இதுவரை மனிதனின் அளவிற்கு வளர்ந்துள்ள ஓர் உயிர் அண்டத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மனிதனாக பிறப்பது ஒருமுறை மட்டுமே. பெரும்பாலானவர்கள் வசதி வாய்ப்புடன் உள்ளனர். அதை மற்றவர்களுக்கும் பயன்படும்படி வாழ வேண்டும். அறிவியல் கண்காட்சிகளில் மாணவர்கள் வித்தியாசமான படைப்புகளை உருவாக்குவதை கண்கூடாக பார்க்கிறோம். மாணவ பருவம் கத்தி மீது நடப்பது போன்றது. சிறந்த வழிகாட்டி இருந்தால் மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாறலாம்; பாதைமாறினால் விபரீதமாகிவிடும். இந்தியாவில் வசதி வாய்ப்புகள் ஏராளமான உள்ளன. சிறந்த முறையில் பயன்படுத்தினால் கட்டாயமாக வாழ்வில் முன்னேறலாம். எனவே, கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்களுக்கு இதை உணர்ந்து செயல்பட்டால், கட்டாயமாக சாதிக்க முடியும்.  சேவை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டால் நாடு முன்னேறும்; இளைஞர்கள் சாதிப்பார்கள். இவ்வாறு, அண்ணாத்துரை பேசினார். விழாவில்,  ஊரக தொழில் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பழனிச்சாமி, பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., அன்பழகன், சங்க நிர்வாகிகள் ஜாபர் அலி, வைத்தியநாதன் மற்றும் இப்ராஹிம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்