உள்ளூர் செய்திகள்

இணையதள வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்கள் ஏமாற்றம்

கோவை குனியமுத்தூரில் உள்ள  தனியார் இன்ஜி., கல்லூரியில் படிக்கும் ஆறு மாணவர்கள், ஒரு இணையத்தளம் உருவாக்கியுள்ளனர். ‘கல்லூரியில் படித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும்’ என்பதே இணையத்தளம் துவக்கப்பட்டதின் நோக்கம். கடந்த மாதம் இந்த இணையத்தளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கோவை அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், எச்.சி.எல்., உட்பட பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. இன்ஜி., கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்; பதிவுக் கட்டணம் 120 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இணையத்தளத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்தனர். அந்த மாணவர்களிடம் இருந்து தலா 120 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, வேலை பெறுவதற்காக கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் தங்களைத் தயார்படுத்தி வந்தனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 20ம் தேதி காலை 9.00 மணிக்கு துவங்கியது. சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலி மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் 5,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள் எதுவும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கவில்லை; மாறாக 13 பி.பி.ஓ., நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. இதனால், இன்ஜி., மாணவர்கள், கடும் அதிருப்திக்குள்ளாயினர். இன்ஜி., முடித்த மாணவர்கள், மட்டுமே முகாமில் பங்கேற்ற அனுமதிக்கப்பட்டதால், கொதித்தெழுந்த மாணவர்கள், போராட்டம் நடத்தவும் தயாராயினர். இன்ஜி., கல்லூரி மாணவ, மாணவியர் கூறுகையில், “ஒவ்வொரு மாணவ,மாணவியரிடம் தலா 120 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால், வேலைவாய்ப்பு முகாமில் சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏதும் பங்கேற்கவில்லை. அனைத்து மாணவர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க  தொலைதூரத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்துள்ளனர். மாணவ, மாணவியர் செலுத்திய 120 ரூபாய் பதிவுக் கட்டணத்தை திருப்பித்தர வேண்டும்” என்றனர். இணையத்தளம் நடத்தி வரும் தனியார் கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:வேலைவாய்ப்பு முகாம் நடத்தி சாப்ட்வேர் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாட்டை தனியார் இணையளத்தள நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் முதலில் சாப்ட்வேர் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் என தெரிவித்தது. ஆனால், கடைசி நேரத்தில் பி.பி.ஓ., நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் என தெரிவித்தது. இதனால், மற்ற மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் தகவலைத் தெரிவிக்க முடியவில்லை. மாணவர்களிடம் வசூலித்த 3.80 லட்சம் ரூபாயை, தனியார் வேலைவாய்ப்பு இணையத்தள நிர்வாகத்திற்கு செலுத்தியுள்ளோம். அந்நிறுவனத்தினரைக் கேட்டால், கடைசி நேரத்தில் எந்தெந்த நிறுவனங்கள் பங்கேற்கும் என்பதை தெரிவித்துவிட்டோம். வாங்கிய பணத்தை திரும்ப பெற மாட்டோம் எனக்கூறினர். இதனால், இன்ஜி., கல்லூரி மாணவர்களுக்கு பணத்தை திருப்பித்தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் செலுத்திய பணத்தை விரைவில் திருப்பித்தருவோம். அதற்கான தகவலை இணையத்தளத்தில் வெளியிடுவோம். நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. இவ்வாறு இணையத்தளம் நடத்திவரும் மாணவர்கள் கூறினர். கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரவடிவேல் மற்றும் போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின்பே, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்