அவல நிலையில் ஆனைமலை தொடக்கப்பள்ளி வளாகம்
ஆனைமலை: பள்ளிக்கூடமே கோவில், மாணவர்களே தெய்வம், அவர்களுக்கு கல்வி போதிப்பதே கடவுளுக்குச் செய்யும் சேவை என்று எண்ணி அந்தக்காலத்தில் பணி புரிந்தோம். தற்போது பாதுகாப்பு இல்லாத பள்ளிக் கட்டடங்கள், அச்சத்தில் ஆசிரியர்கள், மதுபாட்டில்களை பொறுக்கி வீசி விட்டு கல்வி கற்க வேண்டிய சூழ்நிலையில் குழந்தைகள் உள்ளனர் என்பதை பார்க்கும்போது கண்ணீர் விட்டு கதற வேண்டிய மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். ஆனைமலை தொடக்கப்பள்ளி வளாகத்தில், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளி, தொடக்கப்பள்ளி, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. பயமுறுத்தும் கிணறு: இந்த வளாகத்தில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் பின்புறம் பாழடைந்த கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணறு எந்த விதமான பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாமல் செடிகள் முளைத்தும், குப்பை கூளங்கள் நிறைந்து கடும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், இந்த கிணற்று நீரை தற்போது யாரும் பயன்படுத்துவதில்லை. மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவரும் கிடையாது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இந்த கிணற்று சுவரின் மீது ஏறி, பள்ளிக்குள் சென்று மது அருந்தி விட்டு தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். மதுபாட்டில்களை சேகரிக்கும் மாணவர்கள், பயத்தில் ஆசிரியர்கள் இரவில் குடிபோதையில் இவர்கள் வீசி செல்லும் மதுபாட்டில்களையும், உடைந்த மதுபாட்டில்களின் சிதறல்களையும், காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள், சேகரித்தும் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வகுப்பறையை திறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் இந்த அக்கிரமங்கள், விடுமுறை நாட்களில் பகலில் நடக்கின்றன. ஒரு நாள், இந்த பள்ளியின் தலைமையாசிரியர் விடுமுறை நாளில், பகலில் பள்ளியில் மது அருந்தியவர்களைக் கண்டு சத்தம் போட்டுள்ளார். மறுநாள் தலைமையாசிரியர் அறையின் முன்பு மதுபாட்டில்கள் உடைத்துள்ளனர். இதனால், இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். உள்ளம் உருகுதய்யா: இந்த பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆதாரப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, திண்ணைப்பள்ளியாக செயல்பட தொடங்கி, பின்பு தொடக்கப்பள்ளியாக மாற்றப்பட்ட பெருமைமிக்கது இந்த பள்ளி. இந்த கட்டடம் அப்போதைய வனத்துறையினரின் கட்டடம் ஆகும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, ஆனைமலை பகுதியில் இருந்த ஒரே தொடக்கப்பள்ளி இதுதான். முன்னாள் கவர்னர் ஷா முதல் இன்றைய சட்டசபை துணை சபாநாயகர் வரை இப்பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். இது இரண்டு ஆயிரம் மாணவர்கள் படித்த பள்ளி. பிற மாநிலங்களில் இருந்தும் பள்ளிக்கல்வி இயக்குனர்கள் இந்தப்பள்ளிக்கு ஆய்வுக்கு வந்து சென்றுள்ளனர். நாங்கள் பணியாற்றும் காலத்தில், பள்ளிக்கூடங்களை கோவிலாகவும், அங்கு பயிலும் குழந்தைகளை தெய்வங்களாகவும், அந்த குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதை தெய்வத்திற்கு செய்யும் சேவையாகவும் நினைத்தோம். தற்போது இந்த பள்ளியின் நிலையை நினைத்தால், கண்ணில் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது. இங்கு படித்த பலர், இன்று பொறுப்புள்ள பல உயர் பதவிகளில் உள்ளனர். இந்த பள்ளியை சீரமைக்க அவர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். எப்போது கிடைக்கும் தீர்வு? பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, கிணற்றினை சுத்தம் செய்து, இரும்பு வலையை சரி செய்ய வேண்டும். பள்ளிக்குள் நுழையும் சமூக விரோதிகளை தடுக்க, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். யாரும் புகார் கொடுக்கவில்லை என போலீசார் பொறுப்பை தட்டிக்கழிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.