நிரந்தர அதிகாரி நியமிப்பதில் ஓராண்டாக தாமதம்
திருப்பூர்: மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்துக்கு நிரந்தர அதிகாரி நியமிப்பதில், ஓராண்டாக தாமதம் நீடிக்கிறது. திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்த காந்திமதி, 2013 ஏப்., மாதத்துடன் பணி மாறுதலில் சென்றார். பொறுப்பு அலுவலராக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த யதுநாதன், பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்குபின், தாராபுரம் பொன்னு மெட்ரிக் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வனமூர்த்தி, பொறுப்பு அலுவலராக இருந்தார். ஓராண்டுக்குள், பொறுப்பு அலுவலர்களாக மூன்று பேர் பணியாற்றிய நிலையில், தற்போது மாவட்ட கல்வி அலுவலர் கரோலின், தொடக்க கல்வி அலுவலராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். ஓராண்டுக்கு மேலாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்துக்கு, நிரந்தர அதிகாரி நியமிக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில், தொடக்க கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் 1,200க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன; தவிர, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளும், தொடக்க கல்வி துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றன. பள்ளிகளின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணித்தல், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் கல்வி நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துதல் உள்ளிட்டவை தொடக்க கல்வி அலுவலரின் முக்கிய பணி. பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துதல், சென்னையில் நடக்கும் பள்ளி வளர்ச்சி மற்றும் கல்வித்துறை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டங்களுக்கு சென்று வருதல், அங்கு கூறப்படும் முக்கிய விதிமுறைகளை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் என தொடக்க கல்வி அலுவலருக்கு கூடுதல் பொறுப்புகளும் உள்ளன. திருப்பூரில், கடந்த ஓராண்டுக்கு மேலாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்துக்கு, நிரந்தர அதிகாரி நியமிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தொடக்க கல்வித்துறை சார்ந்த பணிகளில், தொய்வு நிலை காணப்படுகிறது.