பிரிட்டனில் படிக்க இந்திய மாணவர்களுக்கு அழைப்பு
லண்டன்: பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவடைந்ததால், நிலைமையை சமாளிக்க, அமைச்சர் தலைமையிலான ஒரு குழுவை, அந்நாட்டு அரசு, இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது. கடுமையான விசா நடைமுறைகளால், பிரிட்டனுக்கு கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையை மாற்றி, அதிகளவு இந்திய மாணவர்களை வரவேற்க, அந்நாட்டு அறிவியல் மற்றும் பல்கலைக்கழக விவகாரங்களுக்கான அமைச்சர் கிரெக் கிளார்க் தலைமையிலான குழு, இந்தியாவில், ஒரு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவில், பிரிட்டனின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் இடம் பெற்றுள்ளனர். தங்கள் சுற்றுப்பயணம் குறித்து கிரெக் கூறியதாவது: பிரிட்டன் பல்கலைக்கழகங்களை, உலகளவிலான மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். பிரிட்டனில் கல்வி கற்க வரும் மாணவர்களுடனான எங்கள் அணுகுமுறை சுமுகமாக உள்ளது. இந்திய மாணவர்களையும் நாங்கள் வரவேற்கிறோம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு எந்த எல்லையும் இல்லை. இவ்வாறு, கிரெக் கூறியுள்ளார்.