‘மனதை ரிலாக்சாக வைக்கலாம்; கட்டுப்பாடில்லாமல் அல்ல...’
உடுமலை: பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்கும், ‘தினமலர் கல்விமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, உடுமலையில் நேற்று நடந்தது; ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கோவை சர்வஜனா பள்ளி ஆசிரியர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என ஆலோசனை வழங்கினர். டி.வி.ஆர்., அகாடமி வழங்கும், ‘தினமலர் கல்விமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, உடுமலை, ஜி.வி.ஜி., கலையரங் கில் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில், சென்னை ‘மைண்ட் பிரஷ்’ நிறுவன தலைமை நிர்வாகி கீர்த்தன்யா பேசியதாவது: வளர்இளம் பருவத்தில், மனதில் ஏற்படும் சிந்தனை மாற்றங்கள் மற்றும் கவனச்சிதறல்களே, அப்பருவத்து மாணவர்களை பாதை மாற்றி அழைத்துச் செல்கிறது. அத்தகைய மாற்றங்களை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இருக்க வேண்டும். பாதை மாறிச் செல்லும் இளம் பருவத்தினர், தற்காலிக மகிழ்ச்சிக்காக, நிரந்தர வாழ்வை இழக்கின்றனர். பெற்றோரின் அரவணைப்பை கடந்து, சுயமாக உழைத்து, முன்னேற வேண்டிய சுழல் ஏற்படும் சமயத்தில், கல்வி மட்டுமே துணையாய் நிற்கும். இன்று நேரத்தை வீணடித்து, மகிழ்ச்சியாக செய்யும் அனைத்து செயல்களும், எதிர்கால வாழ்வை புதைப்பதற்கான குழிகள் என்பதை உணர வேண்டும். மனதை ரிலாக்ஸ்சாக வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, கட்டுப்பாடில்லாமல் வைத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு வரவில்லை, படிக்க பிடிக்கவில்லை என்ற எண்ணங்களை தகர்த்து, மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். கடினமான முயற்சிக்கு பின்னரே நிரந்தர வெற்றி கிட்டும். அடைய வேண்டிய இலக்கை மனதில் தீர்மானித்து, வெற்றிக்கான பயணத்தை தொடர வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். அதன்பின், கோவை சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். ரஞ்சிதம், (தமிழ்): தமிழ் பாடத்தில், எழுத்துப்பிழையால் மட்டுமே முழு மதிப்பெண்ணை தவற விடுகின்றனர். தொடர் பயிற்சி ஒன்றே முழு மதிப்பெண் பெற உதவும். மனப்பாட செய்யுள் பாடத்தில், மறக்காமல் பாவகை குறிப்பிட வேண்டும். செய்யுளை புத்தகத்தில் உள்ளபடி சீர்பிரித்து எழுத வேண்டும். குறளில் வெண்பா வகை கட்டாயம் எழுத வேண்டும். சிறு வினாக்களுக்கு உள்தலைப்பு மற்றும் நெடுவினாக்களுக்கு முன்னுரை, முடிவுரை எழுதினால், முழு மதிப்பெண் பெற முடியும். அணி விளக்க கேள்வி எழுதும்போது, என்ன அணி என்பதை எழுத வேண்டும்.நாடகத்தில் கதாபாத்திரம் மற்றும் நாடக சூழலை எழுதவும், கற்பனை கதையில் உள்தலைப்புகளை தவிர்க்க வேண்டும். சாந்தா, (ஆங்கிலம்): நெடுவினாக்கள் மற்றும் சிறுவினாக்களுக்கு எளிமையான, அதேசமயம் வெவ்வேறு வினாக்களை தேர்வு செய்து எழுத வேண்டும். ஆங்கிலத்தில், விடைக்களை சிறப்பாக எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும். ‘பயோ டேட்டா ‘குறித்த வினாவுக்கு விடையளிப்பதில், பதிவு செய்யும் பணிக்கு ஏற்றவாறு கல்வித்தகுதியில் கூடுதல் செய்திகளை புகுத்த வேண்டும். கல்வித்தகுதியை அட்டவணை முறையில் எழுதுவது சிறப்பு. விடைகளை சீரான நடையில் எழுதுதல் வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து படித்தால் நிச்சயம் முழு மதிப்பெண் பெற முடியும். தட்சிணாமூர்த்தி, (கணிதம்): முழு மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தை மூளையில் பதிப்பதை விட, மனதில் பதிய வைத்து படிக்கத் துவங்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கு முன், ஒவ்வொரு பகுதிகளையும் குறைந் தது ஐந்து முறையாவது பயிற்சி செய்திருந்தால், குழப்பம் ஏற்படாது. சதம் பெறுவதற்கு, கடந்த கேள்வித்தாள்களில் கேட்கப் படாத ஒரு மதிப்பெண் வினாக்களை அறிந்து, அவற்றையும் பயிற்சி செய்ய வேண்டும். புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டு வினாக்களில் இருந்து 60 சதவீத கேள்விகள் கேட்கப்படுகின்றன. எளிமையாக விடை யளிக்கக்கூடிய வினாக்களை தேர்வு செய்து, முதலில் எழுத வேண்டும். 10 மதிப்பெண் வினாக்களுக்கு அதிகபட்சமாக ஏழு நிமிடம் ஒதுக்கி, விடை எழுதும் அளவுக்கு பயிற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.