கம்பத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள்
கம்பம்: கம்பத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று கோப்பைகளை தட்டிச் சென்றனர். தேனி மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடத்தப்பட்டது. கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் காந்தவாசன் தலைமை வகித்தார். மாவட்ட யோகா சங்க தலைவர் துரை ராஜேந்திரன் வரவேற்றார். 12 மாவட்டங்களில் இருந்து 750 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள் புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய யோகா போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர். முன்னோக்கி வளைதல், பின்னோக்கி வளைதல், நின்றநிலை ஆசனங்கள், அமர்ந்த நிலை ஆசனங்கள் என்று பல பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆசனங்களை செய்து காட்டினர். சூப்பர் சீனியர் பிரிவில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், சீனியர் பிரிவில் கம்பம் சக்திவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் வெற்றி பெற்றன. ஜூனியர் பிரிவில் காமயகவுண்டன்பட்டி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியும், சப்ஜூனியர் பிரிவில் அல்அஜ்ஹர் மெட்ரிக் பள்ளியும், சிறப்பு பிரிவில் கூடலூர் மழலையர் பள்ளியும், ஆர்.எஸ்.கே பள்ளியும், பெண்கள் பிரிவில் ஆக்னஸ் மேல்நிலைப் பள்ளியும், உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. பள்ளியும், பின்னோக்கி வளைதல் பிரிவில் தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியும், நின்ற பிரிவில் திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியும் வெற்றி பெற்றன. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.