மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான சுயதொழில் பயிற்சி!
திண்டுக்கல்: குழந்தை திருமணம் முயற்சியால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சுயத்தொழில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வறுமையால் பல்வேறு பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வால் சிலர் இதைதடுத்து நிறுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். சமீபகாலங்களில் இதுபோன்ற பல திருமணங்கள் சமூக நலத்துறையினரால் கடைசி நேரத்தில் கண்டுபிடித்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் மனதளவில் பாதிக்கப்படும் 18 வயது பெண் குழந்தைகளுக்கு சுயதொழில் துவங்குவதற்கான பயிற்சியை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், கேட்டரிங், ஏ.சி., மெக்கானிக், பியூட்டீசியன் குறித்து கற்று தரப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூகநலத்துறை அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.