உள்ளூர் செய்திகள்

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கூட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, ஊக்குவிப்பு கூட்டம் நடத்தப்பட்டது. கோட்டூர் பேரூராட்சி மலையாண்டிபட்டிணத்தில், இந்தாண்டு இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், படிகள் அறக்கட்டளை சார்பில் பயிற்சிக்கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அறக்கட்டளை நிர்வாகி ரங்கநாதன் தலைமை வகித்தார். வக்கீல் குணசேகரன், வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கவிஞர் அம்சப்பிரியா பேசியதாவது: தேர்வுக்கு மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோரும் மனதளவில் தயாராவது அவசியம். தங்கள் குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து, கனவு காண தகுந்த லட்சியங்களை உருவாக்கி அளிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. பெண்கள் கல்வி கற்க இயலாத சூழல் நிலவிய காலத்தில், மருத்துவ துறையில் முதல் டாக்டராக பட்டம் பெற்ற முத்து லட்சுமி ரெட்டி குறித்து மாணவியர் சிந்திக்க வேண்டும். பெண்களுக்கென்ற துறைகளை தேர்வு செய்வதை தவிர்த்து விட்டு, புதுப்புது துறைகளில் நுழைய தயாராக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படை, நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் இந்த பொது தேர்வுகள் தான். இவ்வாறு அம்சப்பிரியா பேசினார்.தொடர்ந்து, மாணவர்களுக்கு வினா வங்கி, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஜெயகுமார், துரைசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்