ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
சென்னை: ஊர்க்காவல் படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி, நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு, 18 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதியுடையவர்கள் ஆவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோரும், தேர்ச்சி பெறாதோரும் விண்ணப்பிக்கலாம். சென்னையில் வசிக் கும், குடும்ப அட்டை உள்ள, குற்றப்பின்னணி இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெற்றோருக்கு தினசரி ஒரு மணிநேரம் பயற்சி அளிக்கப்படும். சீருடை, தொப்பி, காலணி இலவசமாக வழங்கப்படும். இரவு ரோந்து ஊதியமாக, தினசரி, 200 ரூபாய், பகல் ரோந்து மற்றும் போக்கு வரத்து சீர் செய்யும் பணிக்கு, 150 ரூபாய் வழங்கப்படும். மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு ஜனாதிபதி மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கப்படும். இந்த பணிக்காக விண்ணப்பிக்க, கடந்த மாதமே தேதி முடிவடைந்த நிலையில், கனமழையின் காரணமாக, இம்மாதம், 20ம் தேதி வரை, விண்ணப்பிக்கும் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதி உடையோர், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள, ஊர்க் காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, வரும், 20ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, கமிஷனர் அறிவித்துள்ளார்.