உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு பூட்டு போட்ட தேர்தல் அதிகாரிகள்

திருநெல்வேலி: நெல்லை அரசு உதவிபெறும் பள்ளியில், ஓட்டுச்சாவடிக்காக சாய்வுதளம் அமைக்காததால், பள்ளிக்கு தேர்தல் அதிகாரிகள், சீல் வைத்தனர். இதனால் மாணவ, மாணவியருக்கு, சர்ச்சில் வைத்து வகுப்புகள் நடத்தினர். திருநெல்வேலி, சாந்தி நகரில், தென்னிந்திய திருச்சபையின் சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளி உள்ளது. அரசு உதவிபெறும் இப்பள்ளியில், வரும் சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுச்சாவடி அமைக்கும் பணி நடந்தது. அங்கு ஊனமுற்றோர் நடந்து செல்லும் வகையில் சாய்வுதளம் அமைக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால், பள்ளி நிர்வாகம் சாய்வுதளம் அமைக்கவில்லை. இதை கண்டித்த தேர்தல் அதிகாரிகள், நேற்று பள்ளிக்கு வந்து, வகுப்புகளுக்கு பூட்டுப் போட்டுவிட்டு சென்றனர்.இதனால், பள்ளி மாணவ, மாணவியர், அதே வளாகத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிற்பகலில் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், சாய்வுதளத்தை விரைந்து அமைக்க உத்தரவிட்டனர். பின், வகுப்பறைகள் திறக்கப்பட்டன. அரசு உதவிபெறும் தனியார் பள்ளியாக இருப்பினும், அங்கு மாணவ, மாணவியருக்கோ, ஆசிரியைகளுக்கோ கழிப்பறைகள் இல்லை எனவும், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்