விடைத்தாளுடன் பணம் வைக்கும் பல்கலை மாணவர்கள்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, விடைத்தாள் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பத்துடன் 1,000 ரூபாய் நோட்டுகளையும் சில மாணவர்கள் இணைத்து வழங்கியது தெரியவந்துள்ளது. இம்மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பல்கலைக் கழகத்தில், இளநிலை மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் மட்டுமே கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. நவம்பர் செமஸ்டர் தேர்வின் போது தேர்வெழுத விரும்பும் மாணவர்கள், வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன், ஆக. 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) தங்கராஜ் கூறியதாவது:இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் அனைத்தும் பத்து நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டன. ஆனால், மொழித்திறன் தேர்வுகள் உள்ளிட்ட சில பாடங்களுக்கு கல்லூரியிலிருந்து வழங்க வேண்டிய மதிப்பெண்கள் வராததால் தான் தேர்வுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் எவ்வித குறையும் இல்லாமல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய அனைத்து விடைத்தாளுக்கும் தேர்வு முடிவுகள் எங்களிடம் உள்ளன. விடைத்தாளில், பதிவு எண்ணிற்கு பதிலாக, வினாத்தாள் எண்ணை சில மாணவர்கள் தவறாக எழுதுகின்றனர். பல்கலைக்கழக தேர்வில், தேர்ச்சி பெறுவதற்காக சில மாணவர்கள், விடைத்தாளுடன் பணத்தை இணைத்து வழங்குகின்றனர். ஒரு மாணவர் 1,000 ரூபாய் நோட்டையும், மற்றொரு மாணவர் 100 ரூபாய் நோட்டையும் இணைத்து வழங்கியுள்ளனர். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிலும் சிலர் ரூபாய் நோட்டுக்களை இணைத்து வழங்குகின்றனர். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த ஒரு மாணவர், மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை இணைத்து வழங்கினார். இம்மாணவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். இம்மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், அம்மாணவர்கள் எழுதிய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த மூன்று தேர்வுகள் வரை எழுத தடை விதிக்கப்படும். இதற்காக சிண்டிகேட் துணைக்குழு உள்ளது. அக்குழு இம்மாணவர்களிடம் விசாரணை நடத்தி, முடிவை அறிவிக்கும். இவ்வாறு தங்கராஜ் கூறினார்.