புரோக்கர்களான பேராசிரியர்கள்! போலீஸ் விசாரணையில், திடுக்
சென்னை, அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, 2017ல், தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களில், 3.02 லட்சம் மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில், 73 ஆயிரத்து, 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதிலும், 16 ஆயிரத்து, 636 பேருக்கு, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, தேர்ச்சி பெற வைக்கப்பட்டனர். இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான, பேராசிரியை உமா உள்ளிட்ட, 10 பேர், மாணவர்களிடம், தலா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளனர். இவர்களுக்கு பின்னணியில், முக்கிய புள்ளிகள் அடங்கிய, மிகப்பெரிய கும்பல் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், உமாவுக்கு வலது கரமாக, திண்டிவனத்தில் உள்ள, அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரி உதவி பேராசிரியர்கள் சிவகுமார், விஜயகுமார் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்களிடம், மூன்றாவது நாளாக, நேற்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: உமாவின் உத்தரவின்படி, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த, மாணவர்களின் விடைத்தாள்கள், தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன; இது, சட்டப்படி குற்றம். உதவி பேராசிரியர்கள் சிவகுமார், விஜயகுமார் ஆகியோர், புரோக்கர்களாக செயல்பட்டு, லஞ்சப் பணம் வசூலித்து தந்து உள்ளனர். அண்ணா பல்கலைக்கு, சான்றிதழ்கள் அச்சடித்ததிலும், கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. உமாவிடம் விசாரித்த பின்னரே, முழு விபரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -