புதுச்சேரியில் என்.ஐ.டி.,: மனிதவள அமைச்சகம் அனுமதி
இதுகுறித்து, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் என்.ஐ.டி.,(தேசிய தொழில்நுட்ப நிறுவனம்) துவக்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. இதற்கான உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.திருச்சியில் உள்ள என்.ஐ.டி.,யின் இயக்குனர், புதுச்சேரியில் என்.ஐ.டி., அமைக்கும் பணிகளை ஒருங்கிணைப்பார். வரும் கல்வியாண்டில் என்.ஐ.டி., செயல்படத் துவங்கும். என்.ஐ.டி., அமைப்பதற்கு குறைந்தபட்சம் 300 ஏக்கர் நிலம் தேவை. ஆனால், புதுச்சேரியில் அவ்வளவு பெரிய இடம் இல்லாததால், 50ல் இருந்து 100 ஏக்கரில் அமைப்பதற்கு விதிகளில் தளர்த்துமாறு கேட்டுள்ளோம்.என்.ஐ.டி., அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக மத்தியக் குழு விரைவில் புதுச்சேரிக்கு வர உள்ளது. இந்த குழு புதுச்சேரியிலும், காரைக்காலிலும் பார்வையிட்டு இடத்தை தேர்வு செய்யும். என்.ஐ.டி.,யில் புதுச்சேரி மாணவ, மாணவியருக்கு 50 சதவீதம் இடம் கிடைக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.