முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்லுாரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., மற்றும் செயலாளர் நாராயணசாமி கேசவன் வாழ்த்தி பேசினர். கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசுகையில், புதிய தொழில் நுட்ப வளர்ச்சிகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். தொழில் கல்வியுடன் பிற மொழிகள் கற்க வேண்டும். சமூக வலைத்தளங்களை கவனமாக கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும், என்றார்.கல்லுாரி முதல்வர் மலர்க்கண் பேசுகையில், கல்லுாரி சிறப்புகள், வளர்ச்சி, ஆராய்ச்சி, சமூக வளர்ச்சியில் கல்லுாரியின் பங்களிப்பு, வேலை வாய்ப்பு பெற்று தருதல் குறித்து பேசினார்.கல்லுாரி தலைவர் தனசேகரன் பேசுகையில், கல்லுாரியில் சிறப்பான அடிப்படை வசதிகள், கட்டமைப்புடன் தரமான கல்வி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, வேலை வாய்ப்பை பெற வேண்டும், என்றார். கல்லுாரி முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி துணை இயக்குனர் காக்னே, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.