அமெரிக்காவில் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம்
1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 1லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாக எழும்பி வந்த பொருளாதார நிலையில், வேலை இழப்பு, வேலையின்மை காரணமாக மீண்டும் பெரும் பின்னடைவு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது குறித்து அமெரிக்க தொழிலார் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலை வாய்ப்பு, வேலையின்மை தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வேலை இல்லாதவர்கள் 9.8 சதமாக உயர்ந்திருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் 5.6 மில்லியன் நபர்கள் (50 லட்சத்திற்கும் மேல்) வேலை இழந்துள்ளனர். இது அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையில் 35.6 சதம் ஆகும். கட்டுமானம், உற்பத்தி மற்றும் வணிகம் உள்ளிட்ட துறைகளில் தான் பலர் வேலை இழந்துள்ளனர். இந்த வேலையின்மை நிலை நீடித்தால் அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது போன்ற வேலையின்மை காரணமாக நாட்டில் வாங்கும் சக்தி குறைந்து விடும் . இந்த நெருக்கடி காரணமாக உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. யூரோ, யென் மதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2007 ல் பொருளாதாரச்சரிவு ஏற்பட்டபோதுகூட 8.2 மில்லியன் பேர்கள் வேலை இல்லாதவர்களாக இருந்தனர். அதாவது 4.9 சதம். அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் பேசியபோது அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் வேலை கிடைக்கும்படி செய்வேன் என்றும் அது வரை ஓய மாட்டேன் என்றும் சபதமேற்றார். ஆனால் இவரது ஆசை நிராசையாக மாறி வருவது அமெரிக்கர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.