உள்ளூர் செய்திகள்

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களை சென்றடையாத ட்ரெட்ஸ் திட்டம்

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான தமிழக அரசின் ட்ரெட்ஸ் திட்டம் குறித்து அரசு நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களிடையே புரிதல் இல்லாததால் பயன் பெறுவோர் குறைவாக உள்ளனர்.மத்திய அரசின் ட்ரெட்ஸ் திட்டத்தைப் போல கடந்தாண்டு ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் தமிழ்நாடு 'ட்ரெட்ஸ்' திட்டம். இந்த இணையதள பாதையில் குடிசைத்தொழில் முதல் நடுத்தர நிறுவனங்கள் வரையிலான எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இணையலாம். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மத்திய அரசின் உத்யம் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே இணையதளத்தில் இணையமுடியும்.எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை பெறும் தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை, மாநகராட்சி, நகராட்சி, குடிநீர் வாரியம், மின்வாரியம் உட்பட அனைத்து நிறுவனங்களும் இதில் இணையலாம். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கும் அரசு, தனியார் பெரு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக'ட்ரெட்ஸ் திட்டம் செயல்படுகிறது. அரசு, தனியார் பெரு நிறுவனங்கள் பொருட்களை வாங்கிய பின் அதற்கான தொகையை தாமதமாக விடுவிக்கும் பட்சத்தில் ட்ரெட்ஸ் திட்டத்தின் கீழ், தொகையில் 90 சதவீதத்தை அரசிடம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் கடன் பெறலாம்.உதாரணமாக ஒருவர் மின்வாரிய பராமரிப்பு பணியை ஒப்பந்தமாக (எம்.எஸ்.எம்.இ.,) மேற்கொண்டிருந்தால் அவருக்கு மின்வாரியம் தரவேண்டிய ரூ.10 லட்சம் தொகை உடனடியாக கிடைக்காது. பணம் கைக்கு வர ஒரு மாதமாகலாம். பணம் உடனே கிடைத்தால் தான் அடுத்தடுத்த பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும். பணம் முடங்கினால் தொழிலும் முடங்கிவிடும். இதை தவிர்க்கும் வகையில் அடுத்தடுத்து தொழிலில் முன்னேறும் வகையில் ட்ரெட்ஸ் திட்டத்தின் கீழ், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மின்வாரியம் தரவேண்டிய ரூ.10 லட்சத்தில் 90 சதவீதத்தொகையை கடனாக பெறலாம்.அதன்பின் ட்ரெட்ஸ் திட்டத்தின் கீழ் மின்வாரியம் முழுத்தொகையை செலுத்த வேண்டும். மின்வாரியம் செலுத்திய பின், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வரவேண்டிய 10 சதவீத தொகை விடுவிக்கப்படும். இதற்காக அரசு, பெரு நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் 'ட்ரெட்ஸ்' போர்ட்டலில் ஒப்பந்தம் இடவேண்டும். இருதரப்பும் இணைந்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடன்பெற முடியும். இதில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் தான். நிறுவனங்கள் தராத தொகையை 'ட்ரெட்ஸ்' மூலம் 90 சதவீதம் வரை பெற்று அடுத்தடுத்த தொழில்களுக்கு மூலதனமாக பயன்படுத்தலாம். மீதியுள்ள 10 சதவீதத்தொகை கடன்தாரர் கொடுத்தபின் வழங்கப்பட்டு விடும். அரசு, பெரு நிறுவனங்களுக்கும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த திட்டம் குறித்து எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான புரிதல் இல்லாததால் பங்கேற்போரும் பயன்பெறுவோரும் குறைவாக உள்ளனர். அரசு இதுகுறித்து ஆங்காங்கே மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்