தன்னாட்சி கல்லுாரிகள் மதிப்பீடு முறை மாற்றம்
அண்ணா பல்கலை இணைப்பில், 450 இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், 80 கல்லுாரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்றவை. இந்த தன்னாட்சி கல்லுாரிகளில் தேர்வு நடத்துவது, மதிப்பீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, கல்லுாரிகளுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில தன்னாட்சி கல்லுாரிகள், தங்கள் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னாட்சி கல்லுாரி அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு தன்னாட்சி கல்லுாரியின் விடைத்தாளும், மதிப்பீட்டு முறையும், அவ்வப்போது திடீர் ஆய்வு செய்யப்படும். அதேபோல, பல்கலையின் பேராசிரியர்கள் சிலர், தன்னாட்சி கல்லுாரிகளின் மதிப்பீட்டு குழுக்களில் இடம் பெறவும், அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.