தனியார் பள்ளிகள்:கல்வி அதிகாரிகள் ஆய்வு தொடங்கியது
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. "தரமான கல்வி தருகிறோம்&' எனச் சொல்லும் சில பள்ளிகள் புத்தக கட்டணம், டியூஷன் பீஸ், நூலக கட்டணம், கம்ப்யூட்டர் பயிற்சி கட்டணம் என பலவித கட்டணங்களை மனம்போன போக்கில் நிர்ணயித்து, பல ஆயிரம் ரூபாயை மாணவர்களிடம் இருந்து வசூலித்து வருகின்றன.ஆனால் வசூலிக்கும் கட்டணங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு உரிய வசதிகள் கிடைப்பதில்லை. அதிக அளவில் பெற்றோர் செலவு செய்தும், மாணவர்களின் கல்வி தரம் உயராமல் இருப்பதால், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வந்தது. எனவே தனியார் பள்ளிகளின் கட்டணத்தை அவற்றின் தகுதி மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு, தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த 5ம் தேதி வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூர்த்தி தலைமையில், தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பள்ளி வசதிகள் குறித்த முழு விபரங்களை அறிந்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் அவர்களிடம் அளிக்கப்பட்டு, அதனை பூர்த்தி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சிவகுமார் தேவதாஸ் கூறுகையில், 274 நர்சரி மற்றும் பிரைமரி, 195 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது.இந்த விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றை ஆய்வு செய்யும் பணி நேற்று (ஜன. 11) தொடங்கி உள்ளது.ஒன்றிய அளவில் 2 மேல்நிலை மற்றும் 2 உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒரு உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் ஒரு வட்டார வளமைய மேற்பார்வையாளர் என 6 பேர் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர், வரும் 20ம் தேதிக்குள் ஆய்வு பணியை முடித்துக்கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் பின்னர் ஆய்வுக்குறிப்புகளுடன் அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக, சென்னை பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.அதன் பின்னர் இதற்கென அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழுவிடம் விண்ணப்பங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.