நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போலீஸ்காரர்
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், போலீஸ் பணியில் இருந்தபடியே, எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல், &'நீட்&' தேர்வு எழுதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே முதுகம்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ், 24. சென்னை ஆவடியில் போலீசாக பணியாற்றிய அவர், தற்போது, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு உள் ஒதுக்கீட்டில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.இது குறித்து அவர், கூறியதாவது:கடந்த, 2016ல், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தேன்; 915 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவம் படிக்க ஆசையிருந்தும், விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு அப்போதைய சூழலில் முடியவில்லை. பின், கரூர் அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., வேதியியல் முடித்து, 2020ல் போலீசுக்கு தேர்வானேன். அப்போது, அரசு பள்ளிகளில் பயின்றால், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பு படிக்கலாம் என்ற அரசு அறிவிப்பு வந்தது.இதையடுத்து, போலீஸ் பணியில் இருந்தவாறே, 2022ல் எழுதிய நீட் தேர்வில், 268 மதிப்பெண் தான் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வு என்பது கடினமல்ல என்பதையும், பாட புத்தகங்களில் இருந்தே கேள்விகள் வருகின்றன என்பதையும் புரிந்து கொண்டேன். நடப்பாண்டு, நீட் தேர்வில், 400 மதிப்பெண் பெற்றேன். அரசு உள் ஒதுக்கீட்டில் கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்துள்ளேன். மாநில பாட புத்தகங்களுடன், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களையும் படித்தேன். வேறு எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை. நீட் தேர்வை உள்ளுணர்ந்து படித்தால் பயிற்சி வகுப்புகளே மாணவர்களுக்கு தேவையில்லை.அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பாடங்களை முழுமையாக புரிந்து, நீட் தேர்வுக்கு தயாராகும்போது, கூடுதலாக சி.பி.எஸ்.சி., பாடங்களையும் படிக்க வேண்டும். அவ்வாறு முயற்சித்தால், நீட் தேர்வில் அனைத்து மாணவர்களும் வெல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.