எச்சரிக்கை பலகை போதுமா... விழிப்புணர்வு வேண்டாமா!
பல்லடம்: மாணவர்களுக்கு, போக்குவரத்து விதிமுறை குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்ற போக்குவரத்து விதிமுறை உள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவு, 199ஏ ன் படி, உரிய லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். ஓராண்டுக்கு, அந்த வாகனம் ரோட்டில் ஓடுவது ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு, 25 வயது வரை எந்தவித வாகன ஓட்ட உரிமம் வழங்கப்படாது என்ற விதிமுறை உள்ளது. இது குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், அனைத்து அரசு தனியார் பள்ளிகளிலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் வாகனம் இயக்குவதற்கு உண்டான பக்குவம், வயது இல்லாததால், போக்குவரத்து விதிமுறைப்படி அவர்கள் வாகனங்கள் இயக்க தடை உள்ளது. ஆனால், விதிமுறை மீறி மாணவ, மாணவியர் வாகனங்களை இயக்குவதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.விபத்து அபாயம் உணராமல், அதிக சிசி கொண்ட கியர் வாகனங்களை, மாணவர்கள் சிலர் அதிவேகத்தில் ஓட்டு வதும், தொடர்கதையாக நடந்து வருகிறது. பெற்றோரும் இதை உணராமல், மாணவர்களை அவர்களின் போக்கில் விடுகின்றனர். மாணவர்களின் இச்செயல் அவர்களை மட்டுமின்றி மற்றவர்களையும் பாதிக்கச் செய்யும். எச்சரிக்கை பலகைகள் மட்டுமே வைக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.