மாணவர்கள் இடைநிற்றலை கண்காணித்து தடுக்க வேண்டும்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் பேசுகையில், கட்டிகானப்பள்ளி தொடக்கப்பள்ளி, சிறிய இடத்தில் அமைந்திருந்தால் கூட, 305 மாணவர்கள் படித்து வருவது பாராட்டுக்குரியது. அதேபோல தொடக்கப்பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இன்றி படிப்பதற்கு ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பெற்று தர முனைப்பு காட்ட வேண்டும். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் அரசால் வழங்கும் காலை உணவு திட்டம் பற்றி எடுத்து கூறி, காலை உணவை பள்ளி மாணவர்கள் அனைவரும் சாப்பிட வலியுறுத்த வேண்டும் என்றார்.தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி லலிதா, உறுப்பினர்கள் துரை, ராணி மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சாய்ராணி நன்றி கூறினார்.