உள்ளூர் செய்திகள்

தேர்வில் குளறுபடி டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு கண்டிப்பு!

சென்னை: அரசு துறைகளில் உதவியாளர்கள் தேர்வில் உள்ள முரண்பாடுகள் குறித்து, உரிய ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய தவறினால், அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய செயலர் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2009 - 11ம் ஆண்டில், அரசு துறைகளில், 3,475 காலியிடங்களுக்கு தேர்வு நடந்தது. உதவியாளர்கள் பணிக்கான தேர்வில், சாய்புல்லா என்பவர், 223.50 மதிப்பெண்கள் பெற்றார். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான பொதுப் பிரிவுக்கு, 223.50 கட் -ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட் - ஆப் மதிப்பெண்ணுக்கும் குறைவாக எடுத்தவர்கள், உதவியாளர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதையடுத்து, தேர்வு நடைமுறையில் மீறல் நடந்திருப்பதாகவும், தன்னை விட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்வாகி உள்ளனர் என்பதால், அதிக மதிப்பெண்கள் பெற்ற தன்னை தேர்ந்தெடுக்கும்படியும், உயர் நீதிமன்றத்தில் சாய்புல்லா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான பொதுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ், சாய்புல்லாவை தேர்ந்தெடுக்கும்படி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, அரசு பணியாளர்கள் தேர்வாணைய செயலர் மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் இருந்தும், குறைவான மதிப்பெண்கள் எடுத்த நான்கு பேரை, எந்த அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, தேர்வாணைய செயலர் பதில் அளித்து, மனுத் தாக்கல் செய்தார். பதில் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தாங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லை என்று தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வு பிறப்பித்த உத்தரவு:சில தகவல்களை மறைக்கவோ அல்லது தெளிவற்ற பதிலை அளிக்கவோ, முயற்சிப்பதாக தெரிகிறது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பொதுப்பிரிவு மற்றும் முஸ்லிம் பெண்கள் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட, காலியிடங்களுக்கான தேர்வில் நடந்த சில விதிமீறல்களை மறைக்க, தேர்வாணையம் நினைக்கிறது. ஏதாவது தகவல்கள் மறைக்கப்பட்டால், அது நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும்; நீதிமன்றத்தில் தவறான தகவல் அளிப்பதாக கருதப்படும்.எனவே, நீதிமன்றத்துக்கு தகவல் அளிக்காமல் மறைப்பது அல்லது தெளிவற்ற பதில் அளிப்பது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வாணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா, உரிய ஆவணங்களுடன் தேர்வாணைய செயலர் மனுத் தாக்கல் செய்ய, அவகாசம் கோரினார்.வழக்கு குறித்து உரிய தகவல்களுடன், ஆவணங்களுடன், தேர்வாணைய செயலர் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், நீதிமன்றத்தில் ஆஜராகி, அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு, விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.விசாரணையை வரும் 19க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்