ஆசிரியர்கள் மோதல் ஏழு பேர் காயம்
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எரவண்ணுாரில் ஏ.யு.பி., எனப்படும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.இங்கு பயிலும் மாணவர் ஒருவர், சைல்டுலைன் எனப்படும் குழந்தைகளுக்கான இலவச சேவை அமைப்புக்கு ஆசிரியர்கள் தொடர்பாக புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். இது குறித்து விசாரிக்க பள்ளி ஆசிரியர்களின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அப்போது, மாணவர் புகார் தொடர்பாக ஆசிரியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக, புகார் அளித்த மாணவருக்கு உதவியதாக கூறப்படும் ஆசிரியை ஒருவரிடம், பிற ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியையை வீட்டுக்கு அழைத்து செல்ல, வேறொரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அவரின் கணவரான ஷாஷி அங்கு வந்தார்.அப்போது, அவர் தன் மனைவி மீது குற்றம் சுமத்திய பிற ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியதில், ஏழு பேர் காயமடைந்தனர்.போலீசில் பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஷாஷி கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட ஆசிரியையும் பள்ளி ஆசிரியர்கள் தன்னையும், தன் கணவரையும் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய, மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.