உள்ளூர் செய்திகள்

ஜே.ஆர்.சி., ஆசிரியர்களுக்கு நெடுங்கால சேவை விருது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஜே.ஆர்.சி., ஆசிரியர்களுக்கு, சி.இ.ஓ., நெடுங்கால சேவை விருது வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின்கீழ், அனைத்து அரசு, தனியார் நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் பொறுப்பாசிரியர்களில், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, நெடுங்கால சேவை விருது வழங்கப்பட்டது.இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு செல்வதுரை வரவேற்றார். சி.இ.ஓ., அறிவழகன் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றுடன், விருதினை வழங்கி வாழ்த்தினார்.அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஜே.ஆர்.சி. அமைப்பின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருந்து, மாணவர்களிடையே நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, மற்றும், சமூக அக்கறையும் உருவாக்கும் விதத்தில் பயிற்றுவிக்க வேண்டும்.மாணவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, அதற்கான தீர்வுக்கு வழிகாட்டுபவராக இருக்க வேண்டும். இந்தாண்டு, சிறந்த தேர்ச்சி விகிதத்தை பெற்றிடவும், நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.ஜே.ஆர்.சி., மாவட்ட நிர்வாகிகள் எட்வர்ட் தங்கராஜ், ரவீந்திரன், தமிழழகன், விஸ்வநாதன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்