உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் சேர்க்கைக்கு மீண்டும் சிக்கல்

புதுச்சேரி: கதிர்காமத்தில் 2010ம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது.இந்தக் கல்லுாரியில் 180 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருக்கின்றன. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. இங்கு சேரும் மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.கல்லுாரியில் உள்ள 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை 200 ஆக உயர்த்த வேண்டும் எனில், தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையப்படி தகுந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 60 பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப கல்லுாரி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான நியமன விதிகளை திருத்துவதற்கான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் கடந்த 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,படிப்பில் சேர்ந்த மாணவர்களின் அங்கீகாரத்திற்கும், அடுத்த கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு நடத்திய தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர், கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என, அறிவுறுத்தியது.ஆனால், ஜெம்போர்ட்டல் டெண்டர் காலதாமதம் காரணமாக உடனடியாக கேமராக்கள் நிறுவப்படவில்லை. காலதாமதம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் மாணவர் சேர்க்கை அனுமதியை கடந்தாண்டு மே மாதம் 15ம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன் ஒருவழியாக மத்திய அரசினை அணுகி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்தது. இப்போதும் அதேபோன்று பேராசிரியர் நியமனத்திலும் காலதாமதம் செய்வதால் மாணவர் சேர்க்கைக்கு சிக்கல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், அரசு மருத்துவ கல்லுாரியின் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக சுகாதார துறைக்கு கோப்பு அனுப்பியும், இரண்டு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துாங்குகிறது.லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களே உள்ளன. எப்படியும் பிப்ரவரியில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிடும். அப்படி இருக்கும்போது ஒரு மாத்திற்குள் அரசு மருத்துவ கல்லுாரி போராசிரியர் பணியிடங்களை நிரப்ப நியமன விதிகளை திருத்தி, அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில்,தேர்தல் நடைமுறை காரணமாக பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப முடியாதது.நிரப்பவில்லையெனில், மார்ச் அல்லது ஏப்ரலில் தேசிய மருத்துவ கவுன்சில் ஆய்வுக்கு வரும்போது அரசு மருத்துவ கல்லுாரிகளின் சீட்டுகளின் எண்ணிக்கை 200 ஆக உயர்த்த முடியாது. அத்துடன் 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்து 2024ம் ஆண்டு வெளியே வரும் மாணவர்களின் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காது.சென்டாக் மாணவர் சேர்க்கையின் போது இப்பிரச்னை என்னுடைய கவனத்திற்கு வரவில்லை என, கவர்னர் தமிழிசை தெரிவித்தார். இப்போதும் அதே சூழல் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில், நேரடியாக கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தலையிட்டு, அரசு மருத்துவ கல்லுாரி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்