இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மர்ம மரணம்
ஹைதராபாத்: தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அமெரிக்காவில் விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.தெலுங்கானா வனபர்த்தி மாவட்டம் ஜி.தினேஷ் 22, என்ற மாணவர் மேற்படிப்புக்காக கடந்த ஆண்டு டிச. 28ல் அமெரிக்கா கனெக்டிகட் மாகாணத்துக்கு சென்றார். சில நாட்களுக்கு பின் ஆந்திரா ஸ்ரீகாகுளம் மாவட்டம் நிகேஷ் 21, என்ற மாணவர் கனெக்டிகட் மாகாணத்துக்கு சென்றார். இவர்கள் நண்பர்களாகி அங்கு விடுதி ஒன்றில் ஒரே அறையில் வசித்து வந்தனர்.இந்நிலையில் தினேஷ் நிகேஷ் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பக்கத்து அறையில் வசிக்கும் தினேஷின் நண்பர் ஜன. 13ம் தேதி இரவு அவரது வீட்டுக்கு தெரிவித்தார். இதை கேட்ட தினேஷ் குடும்பத்தினர் கதறி அழுதனர். உயிரிழப்புக்கான காரணம் அவர்களுக்கு தெரியவில்லை.தினேஷின் உடலை அமெரிக்காவில் இருந்து தெலுங்கானாவுக்கு எடுத்து வர உதவும்படி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர்.அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மாநில அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.