உள்ளூர் செய்திகள்

புட்லுார் அரசு பள்ளிக்கு பேராசிரியர் விருது

திருவள்ளூர்: கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு, பேராசிரியர் அன்பழகனார் விருது வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலும், பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தகுதியான நான்கு பள்ளிகளை தேர்வு செய்து பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைத்தனர்.மொத்தம் 76 பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என தேர்வு செய்யப்பட்டன. திருவள்ளூர் ஒன்றியம், புட்லுாரில் காமராஜரால் துவங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் பேராசிரியர் அன்பழகனார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.சமீபத்தில் திருச்சியில் நடந்த பேராசிரியர் அன்பழகனார் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று புட்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாஸிடம் பேராசிரியர் அன்பழகனார் விருது வழங்கி பாராட்டினார்.கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் உள்ள கே.இ.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு சிறந்த தலைமை ஆசிரியருக்கான அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் 10 லட்சம் ரூபாய் பள்ளி மேம்பாட்டுக்கான நிதியை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.இந்த விருதைப் பெற்று பள்ளிக்கு திரும்பிய தலைமை ஆசிரியரை மாணவர்கள் பேண்ட் வாத்தியம் முழங்க அவரை வரவேற்றனர். மேலும் பள்ளியின் சக ஆசிரியர்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்