உள்ளூர் செய்திகள்

பணியர் பழங்குடியினரில் முதல் பி.எச்.டி., மாணவி

குன்னுார்: பந்தலுார் பகுதியில் வாழும் பணியர் பழங்குடியினரில் பி.எச்.டி., படிக்கும் முதல் மாணவிக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.பந்தலுார் தேவாலா அருகே வாழவயல் கிராமத்தை சேர்ந்த பாலன், சீதா தம்பதியினரின் மகள் கவுசல்யா. தற்போது குன்னுாரில் உள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் பொருளாதார பிரிவில் பி.எச்டி., முதலாமாண்டு பயின்று வருகிறார்.பணியர் பழங்குடியின மக்களில் முதல் பி.எச்.டி., பயிலும் கவுசல்யா கூறியதாவது: எனக்கு, 2 வயது இருந்த போது தந்தை இறந்தார். தாய் மற்றும் சகோதரி உள்ளனர். 10ம் வகுப்பு வரை, கூடலுார் ஹோலி கிராஸ் பள்ளியிலும், பிளஸ்-2 ஜி.டி.எம்.ஓ., பள்ளியிலும் படிக்க டாக்டர் தேவா என்பவர் உதவினார்.பிளஸ்- 2 முடித்த போது, தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட போது, நர்சாக உள்ள சகோதரியின், 7000 ரூபாய் சம்பளத்தில் குடும்பம் கவனிக்கும் நிலையில் கல்வியை எப்படி தொடர்வது என்ற கவலை எழுந்தது.தொடர்ந்து, நீலகிரி ஆதிவாசி பாதுகாப்பு அறக்கட்டளை உதவியுடன் பிராவிடன்ஸ் கல்லுாரியில் பொருளாதார இளங்கலை, முதுகலை படித்து முடித்தேன். தற்போது பொருளாதாரத்தில் பி.எச்.டி., படிக்க கல்லுாரி துறை தலைவர் ஹேமா ஸ்ரீகுமார், நிதியுதவி செய்து ஊக்கம் அளிப்பதுடன் எனது, இரண்டாம் தாயாக உள்ளார்.எங்கள் சமுதாயத்தில் கல்விக்காக பல குழந்தைகள் ஏக்கம் அடைந்துள்ளனர். வருங்காலத்தில் அத்தகைய குழந்தைகளுக்கு நான் நிச்சயம் உதவுவேன். இவ்வாறு அவர் கூறினார்.ஹேமாஸ்ரீகுமார் கூறுகையில், கல்வி மட்டுமே பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கான ஆயுதம். அதில்,பணியர் இன மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். குடும்ப பிரச்னை இருப்பினும் பி.எச்.டி., வரை படிக்க முயற்சி மேற்கொண்ட கவுசல்யாவுக்கு கல்லுாரி நிர்வாகம்; மாணவிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறோம். பணியர் உட்பட அனைத்து பழங்குடியினர் கல்விக்கு எங்களால் இயன்ற உதவிகளை நிச்சயம் செய்வோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்