பின்னலாடை நகருக்கு அமெரிக்க குழு புகழாரம்
திருப்பூர்: தொழிலாளர் நலன் மற்றும் பசுமை உற்பத்தி வழிமுறைகள், திருப்பூரில் இருப்பது போல் வேறு எங்கும் நாங்கள் பார்த்ததில்லை என அமெரிக்க வர்த்தக குழுவினர் வியந்து பாராட்டியுள்ளனர்.அமெரிக்க அரசின், சர்வதேச வர்த்தக ஆணையப் பிரதிநிதிகள் கேத்தரின் ஸ்டப்பில் பீல்ட், சர்வதேச வர்த்தக ஆய்வாளர் ஜூனி ஜோசப், சர்வதேச பொருளாதார நிபுணர் அமெரிக்க துாதரக பிரதிநிதி கார்த்திக் ஆகியோர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்தனர்.ஆயத்த ஆடை உற்பத்தி, நிறுவனங்களில் தற்போதைய முன்னேற்றம், திருப்பூரின் பின்பற்றப்படும் உயர் தொழில்நுட்பம், திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி கட்டமைப்புகளை ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை அமெரிக்க அரசிடம் சமர்ப்பிக்கும் நோக்குடன், இக்குழு திருப்பூர் வந்துள்ளது.நேதாஜி ஆயத்த ஆடைப்பூங்கா மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்டு, உற்பத்தி தொழில்நுட்பத்தை கேட்டறிந்தனர். தொழிலாளர் நலன் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டறிந்தனர். இணை செயலாளர் குமார் துரைசாமி, அமெரிக்க குழுவினருக்கு விளக்கங்களை அளித்தார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், மற்ற ஆயத்த ஆடை கிளஸ்டர்களை காட்டிலும், திருப்பூரின் தனிச்சிறப்புகளை அறிந்துகொள்ள வேண்டும். திருப்பூரின் அனைத்து வகையான ஏற்றுமதியும், பசுமை ஆடைகளாக இருக்க வேண்டும் என்பதே, சங்கத்தின்நோக்கம் என்றார்.அமெரிக்க அரசின் சர்வதேச வர்த்தக ஆணைய பிரதிநிதிகள் ஜூனி ஜோசப், கேத்தரின் ஸ்டப்பில் பீல்ட் ஆகியோர் பேசுகையில், அமெரிக்க ஆயத்த ஆடை தொழில்துறை, டிச., மாதம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருப்பூர் வந்துள்ளோம்.திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர் நலன் பராமரிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிகபட்ச தண்ணீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. தொழிலாளர் நலன் மற்றும் பசுமை உற்பத்தியை வேறு எங்கும் நாங்கள் பார்த்ததில்லை என்றனர்.ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன், துணை தலைவர்கள் இளங்கோவன், ராஜ்குமார், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை செயலார்கள் சின்னசாமி, குமார் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசியதாவது:திருப்பூர், 15 ஆண்டுகளுக்கு மேலாக, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில், சாயக்கழிவுநீரைச் சுத்திகரித்து வருகிறது. வளம் குன்றா வளர்ச்சி நிலையின் ஒரு பகுதியாக, 18 லட்சம் மரம் வளர்க்கப்பட்டுள்ளது. திருப்பூரின் ஒட்டுமொத்த தேவையை காட்டிலும், நான்கு மடங்கு அதிகமாக, மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.ஆயத்த ஆடை மட்டுமின்றி, அனைத்துவகை பொருட்களையும், இந்தியாவிடம் இருந்துதான் உலகம் இன்று எதிர்பார்க்கிறது. அமெரிக்க குழுவினர், இவ்விவரங்களை நேரில் ஆய்வு செய்து, திருப்பூரின் சாதனைகளை, அமெரிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.