பள்ளிகளில் செயல்படும் அலுவலகங்கள்; கல்வித்துறை கண்டுகொள்ளாததேன்
மதுரை: அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை உடனே வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கல்வித்துறை உத்தரவை மதுரையில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலங்களால் கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அரசு பள்ளி வளாகங்களிலும் செயல்படும் அனைத்து சி.இ.ஓ., டி.இ.ஓ., வட்டார கல்வி அலுவலங்களை (பி.இ.ஓ.,) ஏப்.30க்குள் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.மதுரையில் மேலுாரில் டி.இ.ஓ., அலுவலகம், திருமங்கலத்தில் தொடக்க கல்வி (டி.இ.ஓ.,) அலுவலகம், ஆனையூரில் மேற்கு பி.இ.ஓ., செல்லம்பட்டி, திருப்பரங்குன்றம், கள்ளிக்குடியில் அந்தந்த ஊர் தொடக்க பள்ளிகளில் பி.இ.ஓ., அலுவலகங்கள் செயல்படுகின்றன. கல்வித்துறை உத்தரவுப்படி இவற்றை மாற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என ஆசிரியர், அலுவலர்கள் வலியுறுத்தினர்.தமிழ்நாடு உதவிபெறும் பள்ளிகள் அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் அருள் டெல்லஸ் கூறியதாவது: மேலுார் டி.இ.ஓ., அலுவலக எல்லைக்குள் மதுரை நகர், வாடிப்பட்டி வரையுள்ள பள்ளிகள் வருகின்றன. ஆசிரியர்கள், அலுவலர்கள் பணிரீதியாக மேலுாரில் உள்ள அந்த அலுவலகத்திற்கு செல்ல 40 கி.மீ.,க்கு மேல் பயணிக்க வேண்டும் என்பதால் ஒரு நாள் தேவைப்படுகிறது. இதனால் பணிகள் பாதிக்கிறது.இந்த அலுவலகம் ஏற்கனவே அனைத்து பள்ளிகளும் எளிதில் சென்றுவரும் வகையில் சி.இ.ஓ., அலுவலகத்தில் செயல்பட்டது. எனவே அதை மீண்டும் அங்கு மாற்ற வேண்டும். அதற்கான இடவசதியும் உள்ளது. அதுபோல் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் பணி ரீதியாக எளிதில் சென்று வரும் வகையில் பி.இ.ஓ., அலுவலகங்களுக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும். இதுகுறித்து துறை செயலாளர், இயக்குநர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.