துணைத்தேர்வு மாணவரை ஊக்கப்படுத்திய கலெக்டர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2023 - 24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், 2 ஆயிரத்து, 301 பேர் தோல்வி அடைந்தனர். அதிகபட்சமாக, அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில், 168 பேர் தோல்வி அடைந்தனர்.மாவட்டத்தில், பிளஸ் 1 வகுப்பில், 1,247 பேர், பிளஸ் 2 வகுப்பில், 608 பேர் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத உள்ளனர். இதனால், அரசு பள்ளி களில், துணைத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கலெக்டர் கிறிஸ்துராஜ், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று, சிறப்பு வகுப்பு சிறப்பாக நடைபெறுகிறதா, மாணவ, மாணவியர் வருகை, துணைத்தேர்வுக்காக மாணவர்கள் முனைப்புடன் படிக்கின்றனரா என ஆய்வு செய்தார்.கலெக்டருடன், மாநக ராட்சி கமிஷனர் பவன் குமார், சி.இ.ஓ., கீதா ஆகியோரும் பங்கேற்றனர். வகுப்பறைக்குள், மாணவர்களோடு பெஞ்சில் அமர்ந்த கலெக்டர், நன்றாக படித்து, துணைத்தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறவேண்டும் என கூறி, ஊக்கப் படுத்தினார்.