உள்ளூர் செய்திகள்

மேலை நாட்டவர் தமிழ் கற்க விருப்பம்

அன்னுார்: மேலை நாட்டவர், எனக்கு அடுத்த பிறவி ஒன்று உண்டெனில், அப்போது நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் படித்து வாழவே விரும்புகிறேன் என கூறி வருகின்றனர் என பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தின் தலைவர் ராஷ்ட்ரிய ரத்னா குருஜி சிவாத்மா பேசினார்.கோவை மாவட்டம் அன்னுார் அருகே சர்க்கார் சாமக்குளம் சிவசக்தி சமூக சேவை மையத்தில், கவையன்புத்தூர் தமிழ் சங்கமும், கோவை ஜோதி மைய அறக்கட்டளையும் இணைந்து, ஐம்பெரும் விழாவை நடத்தின.இதில் பாவேந்தர் விழா, பாராட்டு விழா, விருது வழங்கும் விழா, நூல் வெளியீட்டு விழா, மற்றும் தமிழ் சங்கத்தின், 60வது திங்கள் அமர்வு விழா என ஐம்பெரும் விழாக்கள் நடந்தன. ஆசிரியை உலகம்மாள் விழாவுக்கு தலைமை வகித்தார்.சங்கச் பொதுச் செயலாளர் கணேசன் வரவேற்றார். தீக்ஷித், ஆருத்ரா ஆகிய இரண்டு சிறுமியர் திருக்குறளை ஒப்புவித்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் பேராசிரியர் பால சரஸ்வதி, வானோக்கி வாழும் உலகெல்லாம் என்ற பொருளில் பேசினார்.நல்லகவுண்டன்பாளையம் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் தலைவர் ராஷ்ட்ரியா ரத்னா குருஜி சிவாத்மா, சிவ பக்தர் சண்முகத்திற்கு, ஆன்மீக ஆய்வு நாயகர் விருதை வழங்கி பேசியதாவது: தமிழே தன்னையும், சமூகத்தையும் வாழவைக்கும், தனி சிறப்பு பெற்ற கருவி. தமிழை ஆழமாய் கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு ஈடான பண்பாட்டை வளர்க்கும் மொழி வேறு எங்கும் இல்லை.மேலை நாட்டவரும் எனக்கு அடுத்த பிறப்பு ஒன்று உண்டெனில், அப்போது நான் இந்தியாவில், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் படித்து வாழவே விரும்புகிறேன், என்கின்றனர். மனிதனை மாமனிதனாக்கும் சக்தி, திருக்குறளைத் தவிர வேறு ஒன்றுக்கும் இல்லை. குறளைப் படிப்போம், குவளையத்தில் உயர்வோம், உயர்ந்து வாழ்வோம்.நாளும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பதை உணர்த்தும், திருக்குறள் படித்து திரவியம் தேடி, திங்களைப் போல், ஈந்து வாழ்வீர். ஆன்மீக வாழ்வே அடிப்படை. அதைப் பின்பற்றி வாழும் மனிதன் உயர்ந்த இடத்தை பெறுகிறான்.இவ்வாறு குருஜி பேசினார்.விழாவில் பேராசிரியர் பாலதண்டாயுதம், தமிழாசிரியர் முனியாண்டி ஆகியோருக்கு திறனாய்வு திலகம் என்ற விருது வழங்கப்பட்டது. சந்தன மலர் என்ற நூலை பேராசிரியர் பாலுசாமி வெளியிட, தங்கராசு பெற்றுக் கொண்டார்.பாவேந்தர் விழாவுக்கு கோவை ஜோதி மைய அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை சண்முகப்பிரியா தொகுத்து வழங்கினார். கந்தசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்