கேரள பாட திட்டத்தில் பாலின சமத்துவம்
திருவனந்தபுரம்: கேரள அரசின் பள்ளிப் பாடப் புத்தகங்களில் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடங்கள் இடம்பெற்றிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.கேரளாவில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டன. ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதை அடுத்து, புதிய பாடங்கள் அடங்கிய புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன.இதில், மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், பாலின சமத்துவத்தை விளக்கும் கருத்துகள் இடம்பெற்றுஉள்ளன. அவற்றை, தன் சமூக வலைதள பக்கத்தில் மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி பகிர்ந்தார்.வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், குழந்தைகளுக்கு வீட்டின் குடும்ப தலைவர் சமையல் செய்து தருவது போன்ற சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இது கேரள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியை சிந்து கூறுகையில், புதிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாலின சமத்துவம் தொடர்பான பாடங்கள் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமானவை.தெரிந்தோ தெரியாமலோ, சமையலும், வீட்டு வேலைகளும் பெண்களின் முழுப் பொறுப்பு என்ற பொதுவான எண்ணம் நம் சமூகத்தில் உள்ளது.குழந்தைகளும் இந்த உணர்வோடுதான் வளர்கின்றனர். புதிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள் மாணவர்கள் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும். வீட்டில் உள்ள வேலைகளை பெண் பிள்ளைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணமும் சிறு வயது முதலே மாறும் என்றார்.