புதுமைப்பெண் திட்டம் உரிய ஆவணம் அவசியம்
கோவை: புதுமைப்பெண் திட்டத்தில், மாணவர்சேர்க்கையின் போதே உரிய ஆவணங்களை பெற்றிட சமூகநலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படித்த மாணவிகளுக்கு, 1000 ரூபாய் மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.அரசு உதவிபெறும் கல்லுாரி, அரசு கல்லுாரிகளில் பெரும்பாலும் மாணவர்கள் சேர்க்கை நிறைவு பெற்றுள்ள சூழலில், புதுமைப்பெண் திட்ட பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யும் பணி நடந்துவருகிறது.மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'நடப்பாண்டில் முதலாமாண்டு சேரும் மாணவர்களில் தகுதியுடையவர்களின் பெயர்களை, உடனுக்குடன் சமர்ப்பிக்க கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம்.தற்போது சமர்ப்பிக்க பட்டியலில், சில மாணவிகள் மொபைல் எண் இல்லாமலும், வங்கி கணக்கு இல்லாமலும் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இம்மாணவிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆவணங்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் இதுவரை 275 மாணவிகள் பெயர்களை, அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் இருந்து பெற்றுள்ளோம் என்றார்.