சத்துணவு சாம்பாரில் புழு அரசுப்பள்ளியில் ஆய்வு
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சியில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 150 மாணவ,- மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவை, 20 பேர் சாப்பிட்டுள்ளனர். அப்போது வழங்கப்பட்ட முருங்கை கீரை போட்ட குழம்பில் புழு இருந்துள்ளது.இதை மாணவர்கள் பார்த்து விட்டு சத்துணவு ஆசிரியரிடம் கூறவே, உணவை சாப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சில மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே, கலெக்டரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, அவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.இதை தொடர்ந்து பள்ளிக்கு நேற்று வந்த சில பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் விஜயகுமாரிடம் முறையிட்டுள்ளனர். மேலும் கோபி தாசில்தார், வி.ஏ.ஓ., டி.என்.பாளையம் பி.டி.ஓ., சேர்மேன் உள்ளிட்டோர், பள்ளியில் ஆய்வில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். 'இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்தது உண்மைதான். இனி இதுபோல் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறேன்' என்று, அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சத்துணவு ஆசிரியர், இரு சமையலர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து, அறிவுரை வழங்கப்பட்டது.