அரசு பணியிடங்களுக்கு விரைவில் போட்டி தேர்வு
புதுச்சேரி: விண்ணப்பம் பெற்ற அரசு பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்த அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாக உள்ளது.புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் 10,500 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப முடிவு செய்த என்.ஆர் காங்., - பா.ஜ., கூட்டணி அரசு அவ்வப்போது அரசு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு வருகின்றது.இதுவரை, 2,300 அரசு பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டன. ஆனால் அந்த பணியிடங்களுக்கு பல்வேறு காரணங்களால் இன்னும் போட்டி தேர்வு நடத்தப்படவில்லை.இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பம் பெற்றும் போட்டி தேர்வு நடத்தப்படாமல் உள்ள அரசு பணியிடங்களை நிர்வாக சீர்த்திருத்த துறை கணக்கெடுத்து வருகிறது.இந்த அரசு பணியிடங்களுக்கு விரைவில் போட்டி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி தேர்வுக்கான அட்டவணையை நிர்வாக சீர்த்திருத்த துறை அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளது.