தாமரை பிரதர்ஸ் பதிப்பக நுாலுக்கு விருது
லக்னோ: பாவ்ராவ் தேவ்ரஸ் சேவா அறக்கட்டளை சார்பில், தமிழில் ஆன்மிகப் பிரிவில், தாமரை பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நுாலுக்கு, பண்டிட் பிரதாப் நாராயண் மிஸ்ரா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில், பாவ்ராவ் தேவ்ரஸ் சேவா அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் சார்பில், இந்திய மொழிகளில் கவிதை, புனைகதை, குழந்தைகள் இலக்கியம், ஊடகவியல், ஆன்மிகம் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த இலக்கியங்களுக்கு, பண்டிட் பிரதாப் நாராயண் மிஸ்ரா நினைவு விருது கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.தாமரை பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியிட்ட இறை இடம் இவர் என்ற நுால், தமிழில் இந்த ஆண்டுக்கான விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது. இறை இடம் இவர் நுாலில், இறையருள் ஓவியர் மணிவேல், பல்வேறு கோவில்களின் கருவறைகளில் உள்ள தெய்வங்களின் திருவுருவங்களை ஓவியங்களாக வரைந்துள்ளார்.முனைவர் மதுசூதனன் கலைச்செல்வன், அந்த திருவுருவங்களுக்கான தத்துவார்த்தம், அந்த கோவில்களின் வரலாறு, புராணம் மற்றும் விளக்கம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் உள்ள மகரிஷி மகேஷ் யோகி பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் பிரமோத் குமார், டில்லி சம்ஸ்கிருத அகாடமியின் செயலர் அருண் குமார் ஜா ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கும் நிகழ்வு, கடந்த 16ம் தேதி லக்னோவில் நடந்தது.இதில், இறை இடம் இவர் நுாலுக்கான விருதை, அதன் ஆசிரியர் முனைவர் மதுசூதனன் கலைச்செல்வன் பெற்றுக் கொண்டார்.விழாவில் பேசிய பிரமோத் குமார், எந்த நாடு தன் பண்பாட்டை இலக்கியங்கள் மூலம் வளர்க்கவில்லையோ, அந்த நாடு தன் பண்பாட்டை நிரந்தரமாக இழந்து விடும், என்று வலியுறுத்தினார்.