கல்வித்துறையினரின் மந்தநிலை மாற வேண்டும்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, 2023 - 2024ம் கல்வியாண்டில், 23 ஆயிரத்து, 849 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர்; இவர்களில், 23 ஆயிரத்து, 242 பேர் தேர்ச்சி பெற்றனர்; 607 பேர் மட்டுமே தேர்ச்சி பெறாததால், 97.45 சதவீத தேர்ச்சி சதவீதம் பெற்று, திருப்பூர் கல்வி மாவட்டம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று, பாராட்டு பெற்றது.குறிப்பாக, 2019, 2020ஐ தொடர்ந்து மூன்றாவது முறையாக (2024)ல் முதலிடத்தை பெற்றதால், தமிழக பள்ளி கல்வித்துறை உயர்அலுவலர்களின் பாராட்டுகள் குவிந்தது. நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3ம் தேதி துவங்குகிறது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து முக்கிய தேர்வுகள், 25ம் தேதி வரை நடக்கிறது.தயாராகி விட்டதா கல்வித்துறை?விரைவில் திருப்புதல் தேர்வுகளும், அதனை தொடர்ந்து பிப்., மாதம் செய்முறை தேர்வுகளையும் நடத்த தேர்வுத்துறை தயாராகி வருகிறது. கடந்த முறை மாநிலத்தில் முதலிடம் பெற்று அசத்திய திருப்பூர் கல்வி மாவட்டம் இந்தமுறை அதே வேகத்தில் செயலாற்று கிறதா என்ற கேள்வி எழுகிறது.ஏனெனில், இதுவரை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டங்கள் பெயரளவுக்கு மட்டுமே நடந்துள்ளது.பாட வாரியாக பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது, பள்ளிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தி பொதுத்தேர்வு பணிகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்துவது உள்ளிட்ட பணிகள் சுறுசுறுப்படையவில்லை. கடந்தாண்டை விட நடப்பாண்டு கூடுதலாக ஆயிரம் மாணவர் தேர்வெழுதுவார்கள் (25 ஆயிரத்து, 169) என பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.அதற்கேற்ப பொதுத்தேர்வு பணிகளை மாவட்ட கல்வித்துறை வேகப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளது.இப்போது தேவை கவனம்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில், கடந்த, 2023ல், 11வது இடம் பெற்ற திருப்பூர் கல்வி மாவட்டம், கடந்த 2024ல், பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடம் பெற்றது.தேர்வெழுதிய மாணவ, மாணவியரின், 2,300க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெறாததால், ஒரே பள்ளியில், 50க்கும் மேற்பட்டோர் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால், பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விஷயத்தில், மாவட்ட கல்வித்துறை இப்போதிருந்தே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணி குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.நடந்த முடிந்த அரையாண்டு தேர்வில் மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண், தேர்ச்சி விகிதம், பள்ளி வாரியாக பெறப்பட்டு, நடப்பு வாரம் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படுகிறது. நடப்பாண்டும் நல்ல தேர்ச்சி சதவீதத்தை திருப்பூர் கல்வி மாவட்டம் தக்க வைக்கும், என்றனர்.