பனியன் தொழிலில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் ஒருவர், வெளிநாட்டு மாடல்களை போல், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திருப்பூரில் உற்பத்தியாகும் சிறிய பிராண்ட்களுக்கு, கேட்லாக் தயாரித்து அசத்தியிருக்கிறார்.திருப்பூர் நிறுவனங்கள், தங்கள் பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகளுக்கு, பிரபல மாடலிங் ஏஜன்சியை அணுகி, கேட்லாக் தயாரிக்கின்றன. அதற்காக, தயாரிக்கப்படும் உள்ளாடைகள், டி-சர்ட் உள்ளிட்ட பின்னலாடைகளை, வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்.டில்லி, பெங்களூரு, மும்பை போன்ற பல்வேறு நகரங்களில் உள்ள மாடல்கள், அவற்றை பெற்று, அணிந்து, போட்டோ ஷூட் நடத்துவர். அங்கிருந்து, அனுப்பி வைக்கப்படும் மாடல்களின் போட்டோவை கொண்டு, விளம்பரம் மற்றும் கேட்லாக் அறிக்கை தயாரிப்பது வழக்கம். ஏற்றுமதி வர்த்தக விசாரணைக்கான கேட்லாக் தயாரிப்பதும் இதன்வாயிலாக நடக்கிறது.இத்தகைய முயற்சிக்கு, திருப்பூர் பனியன் நிறுவனம் அதிக அளவு செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தயாரித்த ஆடைகளை விலையில்லாமல் அனுப்பி வைப்பதுடன், அவர்களுக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும்; அதற்கு பிறகே, கேட்லாக் தயாரிக்க செலவழிக்கின்றனர்.தலையை சுற்றி காதை தொடும் வேலை எதற்கு என்று யோசித்தவர்கள், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன், திருப்பூரின் தயாராகும் ஆடைகளுக்கும், உள்ளாடைகளுக்கும், கேட்லாக் தயாரிக்கலாம் என வடிவமைத்து, பலத்த வரவேற்பை பெற்றுள்ளனர்.ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன், வசீகரமான மாடல்களை போல், ஆண் மற்றும் பெண்கள் உருவத்தை வடிவமைக்கின்றனர். அதற்கு பிறகு, திருப்பூரில் உற்பத்தியான ஆடைகளை, அவர்கள் அணிந்தது போல் வடிவமைத்து, மிக மிக குறைந்த விலையில், கேட்லாக் தயாரித்து கொடுக்க முடியும் என்று மூன்று வாரங்களுக்கு முன் நிரூபிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஏ.ஐ., தொழில்நுட்பத்தை திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்காக பயன்படுத்தும் தாமோதரன் கூறுகையில், மும்பையில் உள்ள மாடல்களுக்கு, பின்னலாடை மற்றும் உள்ளாடைகளை அனுப்பி, அவர்கள் அவற்றை அணிந்து, போட்டோ எடுத்து வழங்குவர். அதைக்கொண்டு கேட்லாக் மற்றும், பனியன் ஆடை பார்சல் செய்யும் அட்டை பெட்டிகளில் பிரின்ட் செய்ய பயன்படுத்துவோம்.அதிக செலவு ஏற்படுவதுடன், நேரவிரயமும் ஏற்படுகிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால், செயற்கையாக ஆண், பெண் உருவங்களை உருவாக்கி, விளம்பரம் செய்வதால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொழுதுபோக்காக துவங்கியது, இன்று முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன, என்றார்.