ஓயாத நடிகரானார் ஓய்வு நல்லாசிரியர்
நாடகமெனும் ஊடகம் அறிவியல் வளர்ச்சியின் அடுத்த பாய்ச்சலாக சினிமாவென உருமாறியது. அதன் ஆரம்பத்தில் மண்தரையில் வீற்றிருந்து வெண்திரையை ரசித்த கூட்டம் சினிமாக்காரர்களை கூத்தாடியெனக் கூறிக்கொண்டே கொண்டாடவும் செய்தது. ஒருமுறையேனும் நாமும் அக்கூட்டத்திற்குள் நுழைய முடியுமா என்ற ஏக்கத்தை வளர்த்துக் கொண்டே வாழ்ந்தது. அவ்வாறு சினிமா கனவை ரசித்து ருசித்தவர்களில் மதுரை ஞான ஒளிவுபுரம் ஆசிரியர் ஜான்பெலிக்ஸ் கென்னடியும் ஒருவர்.ஆனால் விதி வலியதல்லவா. அவரை துவக்கப் பள்ளியில் ஆசிரியராக அமர்த்தி அரிச்சுவடியை வாசிக்க செய்தது. இயற்கை அவரை இடம் மாற்றிவிட்டாலும், அந்த கனத்த மனிதரின் மனதில் நடிப்புக்கலை கனலாக தகித்துக் கொண்டே இருந்தது. அதனால் ஆண்டுதோறும் நுாற்றாண்டு பெருமை கொண்ட சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் சர்ச்சில் 30 ஆண்டுகளாக பாஸ்கா திருவிழா நாடகத்தில் பல்வேறு பாத்திரங்களில் வேடந்தாங்கி நடிப்பாசையை தணித்துக் கொள்கிறார். வகுப்பறையில் 28 ஆண்டுகள் மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நாடகங்களை நடத்திக் காட்டியுள்ளார்.காலமும், சூழலும் அவரை கல்வியாளராக இயக்கியபோதும், பணியிடைப் பயிற்சியாக சென்ற மும்பை, டில்லி, அசாம், ஒடிசா மாநிலங்களிலும் தேசத் தலைவர்களை நினைவுகூரும் வகையில் நடிப்பு பயிற்சியில் நாடக இச்சையை தீர்த்துக் கொண்டார். சில மருத்துவமனை, ஜூவல்லரி விளம்பரங்களில் நடித்துள்ளார்.அவரது கலை தாகத்தை அறிந்த முன்னாள் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சங்கர், ஐதராபாத்தில் நடந்த சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் மாணவர்களுடன் பங்கேற்கச் செய்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை விழாவில் நடிகை மனோரமா இவரை பாராட்டியுள்ளார்.காலம் முழுவதும் நனவாகாத கனவாகவே இருந்த கலையார்வத்தால், பணிஓய்வுக்குப் பின் பக்குவமாய் சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். இன்று சின்னச்சின்ன வேடங்களில் தனது திறமையால் வியக்க வைக்கிறார் நடிகரான நல்லாசிரியர் ஜான்பெலிக்ஸ் கென்னடி.ஆசிரியர் பணி ஓய்வுக்குப் பின் சினிமா பி.ஆர்.ஓ., நண்பர்கள் மூலம் பல இயக்குனர்கள் தொடர்பு ஏற்பட்டது. அமீரின் இறைவன் மிகப்பெரியவன் படத்தில் அரசியல்வாதி, பொன்ராம் இயக்கிய கொம்புசீவி, கொஞ்சம்பொறு மனமே படத்தில் பள்ளித்தாளாளர், எஸ்.ஏ.சந்திரசேகரின் 'கூரன்' படத்திலும் பள்ளித் தாளாளர், பகவான் இயக்கத்தில் விழா நாயகன் படத்தில் கிராமத்து பெரியவர், மாரீசன் படத்தில் பகத்பாசிலுடன் ஜவுளிக்கடை மேலாளர், வீரதீர சூரன் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஆஜானுபாகு தோற்றதால் அனைத்து பாத்திரங்களிலும் கலக்கி வருகிறார்.அவர் சொல்கிறார், நாடக ஆர்வம் காரணத்தால் நடிப்பு கலைதான் என்னை ஆசிரியராக இயக்கி, நல்லாசிரியராகவும் ஆக்கியது. ஆசிரியராகும் முன் மதுரை தங்கரீகல் தியேட்டரில் பணியாற்றிய போது நாமும் வெள்ளித் திரையில் துள்ளிக் குதிக்க முடியுமா என்று தோன்றியது. இன்று அது சிறுவேடங்களாக நனவானாலும், அதே தியேட்டரில் நான் திரையில் தோன்றுகையில் மனக்காயத்துக்கு மருந்திட்டது போல உள்ளது. ஏழெட்டு படங்களில் நடித்துவிட்டேன். அடுத்தடுத்து புலரி ஆட்டம், சுள்ளான் சேது, மாரீசன் என படங்கள் வருகின்றன. வரும் காலத்தில் படம் முழுவதும் வந்து ஊரே எனது பேர் சொல்லும் அளவு நல்ல பாத்திரத்தில் நடிக்க விருப்பம் உள்ளது. அதுவும் நிச்சயம் நிறைவேறும் என்றார்.