தனியார் பயிற்சி மையங்களில் அமலாக்கத்துறை சோதனை
புதுடில்லி: ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்த, பிட் ஜே.இ.இ., நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையிட்டனர்.டில்லியைச் சேர்ந்த பிட் ஜே.இ.இ., என்ற தனியார் பயிற்சி மையத்திற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், 73 கிளைகள் உள்ளன. இவர்கள் ஐ.ஐ.டி., மற்றும் நாட்டின் சிறந்த பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.இதற்கு கட்டணமாக மாணவர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், டில்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிட் ஜே.இ.இ.,யின் பயிற்சி மையங்கள் முன் அறிவிப்பு ஏதுமின்றி மூடப்பட்டன.ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் பணம் செலுத்தி சேர்ந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து தனியார் பயிற்சி மைய நிர்வாகத்தை பெற்றோர் அணுகிய போது சரியான பதில் கூறவில்லை. இதையடுத்து பிட் ஜே.இ.இ., மீது டில்லி மற்றும் நொய்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப் பதிந்தனர்.இதன் அடிப்படையில், அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தது. விசாரணையின் ஒரு பகுதியாக, நேற்று பிட் ஜே.இ.இ., நிறுவனர் டி.கே.கோயல் மற்றும் பயிற்சி மையம் தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டது.மாணவர்களிடம் வசூலித்த தொகை தனி நபர் பயன்பாடு அல்லது வேறு தொழில்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய இந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.