மனதை கட்டுப்படுத்தாமல் மகத்தான மனிதராக முடியாது
கோவை: கோவை அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் அவினாசிலிங்கத்தின், 122வது பிறந்த தின விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.விழாவில், மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று, பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பெண் கல்விக்காக, சாரதாலயத்தை நிறுவி கல்வி வழங்கியவர் அவினாசிலிங்கம்.அரசியலை அறமாகப் பார்த்தவர். ஆன்மிகத்தோடு கூடிய கல்வியை வழங்கினார். கல்வி நன்னெறி கல்வியாகவும், பண்பாட்டு கல்வியாகவும் அமைய வேண்டும். தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தால், வாழ்வின் பல துன்பங்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்.இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். மனதை கட்டுப்படுத்தாமல், மகத்தான மனிதராக முடியாது. எடுத்துக் கொண்ட செயலை முழுமையாக முடிப்பவர்கள் மட்டுமே வெற்றி அடைவர்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, பல்கலையின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் வரவேற்றார். வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் வாழ்நாள் அறங்காவலர் குழந்தைவேல், பல்கலை பதிவாளர் இந்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.