உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை

புதுடில்லி: 'டில்லியில் நிலவும் காற்று மாசை குறைக்க, பள்ளிகளுக்கும் மின்சார பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.தலைநகர் டில்லியிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் குளிர்காலங்களில் கடுமையான காற்று மாசு ஏற்படுகிறது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள், அளவுக்கு அதிகமான வாகனங்களால் வெளியிடப்படும் புகை போன்றவற்றால் டில்லி மக்கள் கடும் உடல்நல பாதிப்பை சந்திக்கின்றனர்.இதனால் கடந்த ஆண்டுகளில் டில்லியில் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விட நேர்ந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு நடவடிக்கைகளை டில்லி அரசு எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, அரசு சார்பில் டீசல் வாகனங்களுக்கு பகுதியாக, மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், டில்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா பள்ளிக்கு வாங்கப்பட்டுள்ள மின்சார பஸ்களை, முதல்வர் ரேகா குப்தா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், கவர்னர் சக்சேனாவும் இருந்தார்.இந்த விழாவில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:டில்லியில் காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக, மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அடுத்த கட்டமாக டில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மின்சார பஸ்களை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளது. முதல் கட்டமாக சர்தார் படேல் வித்யாலயா பள்ளிக்கு மின்சார பஸ்கள் இயக்கப் படுகின்றன.டில்லியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன.காற்று மாசு அதிகரிப்பதில், பள்ளி பஸ்களும் முக்கிய காரணமாக உள்ளன. இதனால், அனைத்து பள்ளிகளுக்கும் இனி மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான திட்டம் தயாரிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்