உள்ளூர் செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் அறிவிப்பு

புதுடில்லி: மத்திய குடிமைப் பணித் தேர்வாணையம் ஆகஸ்ட் 22 முதல் 31 வரை நடத்திய குடிமைப் பணி பிரதானத் தேர்வின் முடிவுகளை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் இந்திய நிர்வாகப் பணி , இந்திய வெளியுறவு பணி , இந்தியக் காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசின் குழு ஏ மற்றும் பி பிரிவுப் பணிகளுக்கான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.ஆளுமைத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் வயது, கல்வித் தகுதி, சாதி, பொருளாதார ரீதியாக பின்தங்கியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான அசல் சான்றிதழ்களை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இ.டபிள்யூ.எஸ்., பி.டபிள்யூ.பி.டி., முன்னாள் படைவீரர் பிரிவுகளுக்கான சான்றிதழ்கள் 2025 பிப்ரவரி 21-க்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.புதுடில்லி ஷாஜஹான் சாலையில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆளுமைத் தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களை www.upsc.gov.in தளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் UPSC-யை 011-23385271, 011-23381125 என்ற தொலைபேசி எண்களில் அல்லது csm-upsc@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காகித அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என்றும் UPSC தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்