கல்வி இயக்குனர் உத்தரவு காற்றில் பறக்கிறது
அன்னூர்: கல்வி இயக்குனர் உத்தரவை மீறி, விடுமுறையில், சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 23ம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து விட்டன. இதையடுத்து டிச. 24ம் தேதி முதல், ஜன. 4-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் ஜன. 5ம் தேதி முதல் செயல்பட உள்ளன.இந்நிலையில் கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது,' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும் அன்னூர் தாலுகாவில், சில தனியார் பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியரை 26ம் தேதி சிறப்பு வகுப்புக்கு வருமாறு அழைத்துள்ளன.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'அரையாண்டு விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட முடிவு செய்து இருந்தோம். எனினும் பள்ளி நிர்வாகங்கள், சீருடை அணியாமல் கலர் உடை அணிந்து சிறப்பு வகுப்புக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளன. கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்தும் அதை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்த மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.