போட்டி தேர்வுகளில் பங்கேற்க இலவச பயிற்சி
கடலுார்: போட்டி தேர்வுகளில் பங்கேற்க, தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்,பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் நுாலக வசதி உள்ளது.இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.மேலும், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.மத்திய அரசு பணிகள், ரயில்வே பணிகள் மற்றும் வங்கி பணிகளுக்கான எஸ்.எஸ்.சி.,ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., போன்ற தேர்வுமுகமைகளால் வெளியிடப்பட்ட, 2026 ஆண்டிற்கான ஆண்டுத் திட்ட நிரல்களின்படி, 2026 மார்ச் மாதம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன் பெறும் நோக்கில் இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 10ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 10:30 மணி முதல் 1:30 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.இப்பயிற்சி வகுப்புகளில் வாரத்தேர்வுகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகளும் வழங்கப்படவுள்ளன.போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் இரண்டு மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு 04142- 211218 மற்றும் 94990 55908 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.