உள்ளூர் செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டம் மாணவர்கள் பாதிப்பதாக புகார்

சிவகங்கை: அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருவதால் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அரசு விரைவில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.அரசு கல்லுாரிகளில் 8156 கவுரவ விரிவுரையாளர்கள் 30 ஆண்டாக பணி புரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. பல்கலை மானியக்குழு நிர்ணயித்த படி மாதம் ரூ.57,800 சம்பளத்தை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும்.பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரி, அரசு மகளிர் கல்லுாரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடாமல் வகுப்புளை புறக்கணித்து 3ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அடுத்த மாதம் பல்கலை தேர்வு நடைபெற உள்ள நிலையில் 3 நாட்களாக நடைபெறும், இந்த போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிப்பதோடு, விரைவில் அரசு இதில் தலையிட்டு கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்நிலையில், நேற்று சிவகங்கையில் உள்ள இரண்டு அரசு கல்லுாரிக்கும் சென்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,செந்தில்நாதன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கையை பெற்று வரும் சட்டசபை கூட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் இது குறித்து பேசுவதாக உத்தரவாதம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்