ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விளையாட்டு உபகரணம் வழங்கல்
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எனது இளைய பாரதம் சார்பில் இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். முன்னாள் தேசிய இளையோர் தொண்டர் ஷோகேஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட இளைய பாரதம் முன்னாள் அலுவலர் சஞ்சனாவாட்ஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதால், கண்பார்வை பிரச்சனை ஏற்படுகிறது. சிந்திக்கும் திறனை மூளை இழந்து விடுவதுடன் உடல் சோர்வு ஏற்படும். இதற்கு மாறாக இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி, தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் காந்தி நன்றி கூறினார்.