மாணவ, மாணவியருக்கு விருது வழங்கும் விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2025 - 26ம் ஆண்டில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு, 'சங்கரா க்ளிட்ஸ் - 2026' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கலையரங்கில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஆர். பாலகுருநாதன் வாழ்த்துரை வழங்கினார்.சங்கரா கல்லுாரி 35 ஆண்டுகளில் 50,000க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியரை உருவாக்கி, அவர்களது குடும்பங்களில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்துள்ளது என பேசினார்.அதை தொடர்ந்து, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிர்ம வேதியியல் உள்ளிட்ட 12 துறைகளில் கல்வியில் தலைசிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கும், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஆகியவற்றில் சிறந்த சேவை புரிந்த மாணவ, மாணவியர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ‛சங்கரா க்ளிட்ஸ் - 2026' என்ற விருதையும், சான்றிதழையும் வழங்கினார்.பட்டிமன்ற பேச்சாளர் திருச்சி இரா.மாது, மாணவர்கள் நல்ல சிந்தனைகளையும், வள்ளுவரின் வாக்கின்படி மனிதப் பண்பையும் வளர்த்து கொள்ள வேண்டும்.பெற்றோரையும், ஆசிரியர்களையும் தங்கள் வாழ்நாள் முழுதும் மறக்கக் கூடாது என, பேசினார்.இவ்விழாவிற்கு கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் முனைவர் ஜெ.இராதாகிருஷ்ணன் வரவேற்றார். உதவி பேராசிரியர் ச.தெய்வசிகாமணி நன்றி கூறினார்.